ஏப்ரலில் வெளியாகும் ஏ. ஆர். ரகுமானின் ’99 சாங்ஸ்’

‘ஓஸ்கர் நாயகன்’ ஏ. ஆர். ரகுமான் கதை எழுதி, இசையமைத்து, தயாரித்திருக்கும் ’99 சாங்ஸ்’ என்ற திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.

‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் தன்னுடைய திரை இசை பயணத்தில் 25 ஆண்டுகளை கடந்த பிறகு, இசை அமைப்பாளர் என்ற தளத்திலிருந்து கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார்.

இவருடைய கதை மற்றும் தயாரிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் :99 சாங்ஸ்’. இசையை மையப்படுத்திய இந்த திரைப்படத்தில் ஈகான் பட் மற்றும் எடில்ஸீ வர்கீஸ் ஆகியோர் நாயகன், நாயகியாக அறிமுகமாகிறார்கள்.

இவர்களுடன் பொலிவுட் நடிகைகள் லிசா ரே, மனிஷா கொய்ராலா, ஆதித்யா ஷீல் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தனம் ஸடம் மற்றும் ஜேம்ஸ் காவ்லீ  ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு, ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இந்தப்படத்தில் இசைக் கலைஞர்களான ரஞ்சித் பரோட், ராகுல் ராம், ரெமோ பெர்னாண்டஸ் உள்ளிட்ட  புதிய பொப்பிசை பிரபலங்களும் நடிகர்களாக பங்குபற்றியிருக்கிறார்கள்.

2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் பணிகள், கடந்த 2019ஆம் ஆண்டு நிறைவடைந்தது. அதன் பிறகு தென்கொரிய நகரான பூஸான் நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பலரின் கவனத்தையும் கவர்ந்தது.

அதன்பிறகு கொரோனா தொற்று காரணமாக படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது ஏப்ரல் மாதம் 16ஆம் திகதியன்று ’99 சாங்ஸ்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது என ஏ. ஆர். ரகுமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

இதனிடையே ஏ. ஆர். ரகுமானின் மேடை இசை நிகழ்ச்சியை மையப்படுத்தி அவர் நடிப்பில் வெளியான ‘ஒன் ஹார்ட்’ திரைப்படம், தமிழில் வெளியாகி போதிய அளவிற்கு வரவேற்பு பெறவில்லை என்பதும், தற்போது ஏ ஆர் ரகுமான் தயாரிப்பில் இந்தத் திரைப்படம் உருவாகி இருப்பதால், இதற்கு ஏ. ஆர். ரகுமானின் ரசிகர்களை கடந்து, அனைத்து தரப்பு இசை ஆர்வலர்களையும் கவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com