மிதாலி ராஜின் மற்றொரு மகத்தான சாதனை

இந்திய ஒருநாள் மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி மிதாலி ராஜ் இன்று ஞாயிற்றுக்கிழமை மேலும் ஓர் வரலாற்று மைல்கல்லை எட்டினார்.

அதன்படி சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 7 ஆயிரம் ஓட்டங்களை பெற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.

லக்னோவில் தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு எதிராக இடம்பெற்று வரும் நான்காவது ஒருநாள் போட்டியின்போதே அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.

போட்டி தொடங்குவதற்கு முன்பு, மிதாலி தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 6,974 ஓட்டங்களை எடுத்திருந்தார். போட்டி ஆரம்பமாகிய பின்னர், துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவர் 26 ஓட்டங்களை பெற்று 7 ஆயிரம் ஓட்டங்களை பெற்றார்.

தனது 213 ஆவது ஒருநாள் போட்டியில் மிதாலி  இந்த மைல்கல்லை எட்டினார்.

அதன் பின்னர் அவர் 71 பந்துகளில் 4 பவுண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினை நழுவ விட்டார்.

மிதாலி நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியின்போது சர்வதேச மகளிர் கிரிக்கெட் அரங்கில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com