பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு தடை ; மீளாய்வு செய்ய உள்துறை அமைச்சரிற்கு உத்தரவு

பிரித்தானியாவில்  விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யுமாறு இரகசிய தீர்ப்பாயமொன்று உள்துறை அமைச்சர் ப்ரீதி பட்டேலிற்கு உத்தரவிட்டுள்ளது என டெய்லி மெயில்  செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இந்த உத்தரவை வழங்கியுள்ளதாக டெய்லி மெயில்  தெரிவித்துள்ளது.

இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1978 ஆம் ஆண்டு இலங்கையில் தோற்றம் பெற்ற இந்த பிரிவினைவாத அமைப்பு தற்கொலை குண்டுதாரிகளை உருவாக்கியது என சர்வதேச அளவில் கருதப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகள்  அமைப்பை 2001 இல் பிரித்தானியா  தடை செய்தது. எனினும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்த  தடைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது.

விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் பிரித்தானியாவில் பயங்கரவாதம் குறித்து ஆய்வு செய்துவரும் கூட்டு பயங்கரவாத ஆய்வு நிலையம் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாதத்தினை இன்னமும் கைவிடவில்லை என்பதால் தடை தொடரவேண்டும் என தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளிற்கு எதிரான தடையை நீடிப்பதற்கான காரணங்களில்  குறைபாடுகள் உள்ளதால் உள்துறை அமைச்சர் தடை குறித்து மீளாய்வு செய்யவேண்டும் என  சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

தடையை நீக்குவதற்காக  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

நாங்கள் சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ள அவர் அதுவரை விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாகவே விளங்கும் என தெரிவித்துள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com