சகலதுறையிலும் ஜொலித்த முள்ளிவாய்க்கால் மாணவனுக்கு கிடைக்கவுள்ள உயரிய விருது

யாழ் பல்கலைக்கழகத்தின் 35வது பொதுப்பட்டமளிப்பு விழாவில் இம்முறை யாழ்.பல்கலையின் உயரிய விருதாகிய துரைராஜா விருதினை யேசுரட்ணம் சிறீ என்ற மாணவன் பெற்றுக்கொள்ளவுள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் கல்வி, விளையாட்டு தலைமைத்துவம் முதலிய பல துறைகளிலும் சிறப்பாக செயற்பட்ட மாணவர்களில் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு யாழ் பல்கலையின் உயரிய விருதாகிய துரைராஜா விருது வழங்கப்படுவது வழக்கமாகும்.

அந்த வகையில் எதிர்வரும் 24 மற்றும் 25 ம் திகதிகளில் யாழ் பல்கலையின் 35வது பொதுப்பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் உயரிய விருது துணைவேந்தர் அவர்களால் வழங்கப்படவுள்ளது.

முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து பல்கலைக்கு தெரிவாகி ஊடகத்துறையில் சிறப்புக்கலைமாணி பட்டத்தை பெற்று வெளியேறவுள்ள யேசுரட்ணம் சிறி என அழைக்கப்படும் மாணவனுக்கே உயரிய விருதினை வழங்க யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இதனை யாழ் பல்கலைக்கழக இணையத்தளத்தில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இறுதி யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இறுதியாக குடியேறி பின்னர் பல்கலைக்கழகம் வந்து குறித்த வெற்றியினை அம்மாணவன் பெறவுள்ளார். குறித்த விருதினை பெற்றுக்கொள்வதற்காக 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்தமையும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.