அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நோக்கம் எவருக்கும் இல்லை!

அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நோக்கம் எவருக்கும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் எழுந்துள்ள கருத்து முரண்பாடுகளுக்கு தீர்வை காண்பதற்கும் கூட்டணியை பலப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இவ்விடயம் தொடர்பான கட்சி தலைவர் கூட்டம் எதிர்வரும் 25 ஆம் திகதி இடம் பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பொதுஜன பெரமுனவில் உரிய நிலை வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்ட கருத்தை ஒரு தரப்பினர் பெரிதுபடுத்தி கூட்டணிக்குள் தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்தி விட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் கூட்டணியமைத்துள்ளோம் என்ற காரணத்திற்காக பேச்சு சுதந்திரத்துக்கு தடை விதிக்கப்படவில்லை எனவும் அரசாங்கம் தவறான வழியில் செயற்பட்டால் அதனை சுட்டிக்காட்ட ஒருபோதும் பின்வாங்கமாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.

தேவையில்லாத பிரச்சினையை பெரிதுபடுத்தி அதனூடாக அரசாங்கத்தை பலவீனப்படுத்த ஒரு தரப்பினர் ஆளும் தரப்பிற்குள் செயற்படுகிறார்கள் என தெரிவித்துள்ள அவர், இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

தவறுகளை எதிர்க்கட்சியினர் மாத்திரம் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை கிடையாது என்றும் தவறுகள் திருத்திக்கொண்டால் மாத்திரமே அரசியலில் தொடர்ந்து பயணிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டணியில் தற்போது ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும் என்பதால், எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சி தலைவர் கூட்டத்தில் இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.