இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல் – எச்சரிக்கிறது இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட உருமாறிய புதிய வகை வைரஸ் இலங்கையிலும் 4 பிரதேங்களில் கண்டறியப்பட்டுள்ளதால் , காலம் தாழ்த்தாமல் உரிய தீர்மானங்களை துரிதமாக எடுக்க வேண்டும்.

அவ்வாறில்லை என்றால் அடுத்த மாதத்திற்குள் நாடு பாரிய ஆபாயத்திற்கு முகங்கொடுக்க கூடிய நிலைமை ஏற்படும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் றோஹன தெரிவித்தார்.

இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் தொடர்பில் தெரிவிக்கையில் இதனைக் கூறிய அவர் மேலும் தெரிவித்ததாவது :

இலங்கையில் மாவட்ட ரீதியில் நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதேவேளை , மரணங்களின் எண்ணிக்கையும் உயர்வடைந்து செல்கிறது.

இந்நிலையில் பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட உருமாறிய புதிய வகை வைரஸ் இலங்கையின் 4 இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த நிலைமையை அரச சுகாதார அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் சரியான தீர்மானமொன்றை எடுக்காவிட்டால் அடுத்தடுத்த மாதங்கள் பாரிய ஆபத்துடையவையாகும்.

அடுத்த மாதத்திற்குள் பாரிய ஆபத்திற்குள் தள்ளப்பட்டு கொவிட் பரவலால் முழு நாடும் நெருக்கடிக்கு முகங்கொடுக்கக் கூடிய நிலைமை ஏற்படும்.

எனவே நாட்டில் கிராம புறங்கள் உள்ளிட்ட கீழ் மட்டங்களில் காணப்படுகின்ற நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து , அவற்றை இலக்காகக் கொண்டு துரிதமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரச சுகாதார தரப்பினரிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.