இந்தியாவிலிருந்து மீண்டும் இலங்கைக்கு வந்த “சாரா” எனப்படும் புலஸ்தினி! தேடுதல் வேட்டை ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என கருதப்படும் சாரா என அழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் இந்தியாவிலிருந்து மீண்டும் இலங்கை வந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஆணைக்குழு சிஐடி யினருக்கு உத்தரவிட்டுள்ளது.

கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்டவரின் மனைவியான சாரா என அழைக்கப்படும் புலஸ்தினி இராஜேந்திரன் இந்தியாவிற்கு தப்பியோடியிருந்த நிலையில் மீண்டும் கடல்மார்க்கமாக இலங்கை திரும்பியுள்ளார் என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஆணைக்குழு சிஐடியினருக்கு உத்தரவிட்டுள்ளது.

கடல்வழியாக இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ள புலஸ்தினி மன்னாரில் மூன்று இடங்களில் தங்கியிருந்த பின்னர் புத்தளத்திற்கு சென்று பின்னர் மட்டக்களப்பிற்கு சென்றுள்ளார் என புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையிலேயே ஆணைக்குழு இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்னமும் கைது செய்யப்படாமல் தப்பியுள்ளவர்கள், பிணையில் விடுதலையானவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டு போதிய ஆதாரமின்மையால் விடுதலை செய்யப்பட்டவர்களை புலஸ்தினிசந்தித்துள்ளார் என ஆணைக்குழுவிற்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரியவருகின்றது.