ஜெனிவாவை எதிர்கொள்ள மகிந்த -கோட்டா இணைந்து எடுத்துள்ள தீர்மானம்

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வுகளின் போது, இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள மனித உரிமை குற்றச்சாட்டுக்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் ஜனாஸா நல்லடக்கம் உள்ளிட்ட சில தீர்மானங்களை எட்டியுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஸ கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என தானும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் கலந்துரையாடி தீர்மானத்தை எட்டியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கடந்த 9ம் திகதி நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார் என பிரபல சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்னர, ஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, சில அமைச்சர்களுடன் அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தையின் போது தெரிவித்துள்ளார்.