கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள பழ.நெடுமாறனின் உடல்நிலை சீராகவுள்ளது!

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவனத் தலைவருமான பழ.நெடுமாறனுக்கு (87 வயது) கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர், சென்னை ராஜீவ்காந்தி அரச பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்ற நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்று அவரது நிரையீரலை 20 வீதம் பாதித்துள்ளதாகத் தெரிவித்துள்ள வைத்தியர்கள், தற்போது அவரது உடல்நிலை சீராகவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகம் உட்பட இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகின்ற நிலையில், கடந்த 11 மாதங்களில் தமிழகத்தில் பல்வேறு பிரபலங்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் எனப் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பழ.நெடுமாறனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் அவருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் பரிசோதனை முடிவுகள் நேற்று வெள்ளிக்கிழமை கிடைக்கப்பெற்றதையடுத்து, அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பழ.நெடுமாறன் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்துவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பழ.நெடுமாறனுக்குக் கொரோனாத் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி கேட்டு வருத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள ஸ்டாலின், மூத்த தமிழ் ஆர்வலர் மற்றும் ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக நீண்ட காலமாகப் போராடி வருபவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.