உருமாறிய கொரோனாவிற்கு எதிராக 10 வருடங்கள் வரை போராட வேண்டி வருமாம்!

“பிரிட்டனில் புதிதாக உருமாறிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வைரஸை எதிர்த்து 10 ஆண்டுகளுக்குப் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்’’ என்று பிரபல விஞ்ஞானி எச்சரித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது கொரோனா தடுப்பூசிகள் உலகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், பிரிட்டனின் கென்ட் நகரில், கொரோனா வைரஸ் புதிதாக உருமாற்றம் பெற்று பரவத் தொடங்கியது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தடுக்க புதிதாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளே, உருமாற்றம் பெற்ற கொரோனா பாதிப்புக்கும் வழங்கலாம் என்று கூறுகின்றனர்.

இந்நிலையில், ‘கோவிட்-19 ஜெனோமிக்ஸ் யுகே கன்சார்டியம்’ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரும் விஞ்ஞானியுமான ஷேரன் பீகாக் நேற்று கூறியதாவது:

கொரோனா வைரஸ், உருமாற்றம் பெறும் கொரோனா வைரஸ் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறோம். கென்ட் பகுதியில் முதலில் பரவிய உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அந்தச் சூழ்நிலையில், புதிய வகை கொரோனாவை எதிர்த்து 10 ஆண்டுகளுக்கு போராட வேண்டியிருக்கும்.

வைரஸின் தாக்கம், நோய் உருவாக்கும் தீவிரம் போன்றவற்றை சரியாக கணித்து தடுப்பதற்கான தீர்வை கண்டுபிடித்து விட்டால், நாம் பயப்பட வேண்டியிருக்காது. ஆனால், அதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என்று நினைக்கிறேன். என்னை பொறுத்த வரையில் 10 ஆண்டுகள் கூட ஆகலாம். இவ்வாறு ஷேரன் பீகாக் கூறினார்.