கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா; அச்சத்தில் ஊழியர்கள்!

கிளிநொச்சி அறிவியல் நகரில் இயங்கி வரும் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுடன் பணியாற்றிய ஏனைய ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) கடமைக்குச் சென்ற நிலையில், அவர்கள் தமது அச்சத்தினை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளாத குறித்த ஆடைத்தொழிற்சாலையின் நிர்வாகம் தொடர்ந்தும் அவர்களை சேவையாற்றுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் அங்கு அமைதி இன்மை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக அங்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுரைகளை வழங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்த நிலையில் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பல்வேறு பிரதேசங்களிலிருந்து பலரும் தொழிலுக்காகச் செல்கின்றனர்.

இதனால் மாவட்டத்தின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு தொழிற்சாலை நிர்வாகம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்ற கோரிக்கை பொது அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, குறித்த ஆடைத் தொழிற்சாலைக்கு வெளி மாவட்டங்களிலிருந்து உயர் பதவிநிலை ஊழியர்கள் வருகை தருவதால் ஆபத்தான நிலை காணப்படுவதாகவும் பொது அமைப்புக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அதற்கு அமைவாக சம்மந்தப்பட்டவர்களும் சுகாதார துறையினரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.