உடல் சோர்வு நீங்க மகனை நரபலி கொடுத்த தாய்!

கடவுளின் உத்தரவின் பேரிலேயே தன் மகனை தியாகம் செய்ததாக மகனை கொலை செய்த தாய் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள பூலக்காட்டை சேர்ந்த சுலைமான் என்பவரின் மனைவி சஹீதா. இவர், அங்குள்ள மதரசாவில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சுலைமான் வளைகுடா நாட்டில் பணியாற்றியவர். தற்போது, கேரளாவில் டிரைவராக உள்ளார். ஏற்கெனவே , இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ள நிலையில் சஹீதா 4 மாதம் கர்ப்பமாகவும் இருந்துள்ளார். தம்பதிக்கு ஆமில் என்ற 6 வயதில் 3வது மகன் இருந்தான்.

நேற்று காலையில் பாலக்காடு தெற்கு காவல் நிலைய போலீஸாரை தொடர்பு கொண்ட சஹீதா, தன் 3வது மகனை கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார்.

போலீஸார் சஹீதா வீட்டுக்கு சென்று பார்த்த போது, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சிறுவன் ஆமில் கிடந்தான். சிறுவனின் உடலை மீட்ட போலீஸார், தாய் சஹீதாவை கைது செய்து விசாரித்தனர்.

சஹீதா கடந்த சில நாட்களாக சோர்வான நிலையில் இருந்துள்ளார். இதனால் அவருக்கு தோஷம் இருப்பதாகவும், 3வது மகனை நரபலி கொடுத்தால் தோஷம் நீங்குவதுடன், மகனும் உயிரோடு வந்து விடுவதாக கனவு வந்து உள்ளது.

எனவே , சஹீதா தன் 3வது மகனை நரபலி கொடுக்க முடிவு செய்தார். நேற்று அதிகாலை 4 மணிக்கு மகனை வீட்டில் உள்ள குளியலறைக்கு தூக்கிச்சென்று கத்தியை எடுத்து கழுத்தை அறுத்து மகனை கொலை செய்துள்ளார். சஹீதா மகனை கொலை செய்த போது, கணவர் சுலைமானும் மற்ற இரு குழந்தைகளும் பக்கத்து அறையில்தான் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். போலீஸாரிடத்தில் கடவுள் உத்தரவிட்டதால் தன் மகனை தியாகம் செய்ததாக சஹீதா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் ஆந்திராவில் சித்தூர் அருகே பெற்றோர் தங்கள் இரு மகள்களை நரபலி கொடுத்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில், கடவுளின் தேசமான கேரளாவில் நிகழ்ந்த இந்த கொடுர கொலையும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.