முஸ்லிம் மக்களை வவுனியாவில் அணி திரளுமாறு மக்கள் காங்கிரஸ் அழைப்பு!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி நாளைய தினம் வவுனியாவை வந்தடையவுள்ள நிலையில், இதற்கு வவுனியா முஸ்லிம்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அக்கட்சி அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில், “சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்து தமிழ் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் கட்சிகளால் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பேரணிக்கு, தமது பூரண ஒத்துழைப்புகளை வழங்குமாறு வவுனியா மாவட்டத்தில் வசித்துவரும் அனைத்து முஸ்லிம் மக்களிடமும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேண்டுகோள் விடுக்கின்றது.

சிறுபான்மையினர் என்ற வகையிலும் முஸ்லிம் சமூகமும் இந்த அரசாங்கத்தின் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் இனம் என்றவகையிலும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்போராடத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த போராட்டம், நாளை மதியம் 12 மணியளவில் வவுனியாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த நேரத்தில் வவுனியா கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தினச் சந்தைக்கு முன்பாக அனைத்து முஸ்லிம் உறவுகளும் ஒன்றுகூடுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி மற்றும் முகமதுலரீப் ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.