தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும்!

எமது இலக்கை அடையும் வரை எமது போராட்டம் தொடரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிக்கான போராட்டம் இன்றிரவு திருகோணமலை நகரை வந்தடைந்தது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ்பேசும் மக்கள் மீதான அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்தும், தமிழின அழிப்புக்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேசத்திடம் நீதி கோரியும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடைபெறும் இந்தப் போராட்டப் பேரணியில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன்று இராணுவ மயமாக்கல், பௌத்த மயமாக்கல் தலைவிரித்தாடுகின்றது. நாட்டில் இன்று ஜனநாயக ஆட்சி இல்லை. இராணுவ ஆட்சியை நோக்கியே நாடு செல்கின்றது. இதற்கு உடன் முடிவு கட்டப்பட வேண்டும். தமிழ்பேசும் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும்.

இதை நாட்டின் தலைவர்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

இந்தப் போராட்டம் முடிவு அல்ல. இது ஆரம்பப் போராட்டமே. எமது இலக்கை அடையும்வரை எமது போராட்டம் தொடரும்” என்றார்.