ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் முகம் சுழிக்கவைத்த சாணக்கியனின் செயல்!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுவரும் அநீதியை கண்டித்து, பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் தன்னை முதன்மைப்படுத்தும் பதாதையுடன் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் செயல் தமிழ் மக்களின் மிகுந்த கண்டனத்திற்கு உள்ளாகிவருகின்றது.

தமிழ் மக்களையும், தமிழ் மக்கள், மீது இழைக்கப்பட்டுவரும் அநீதிகளையும், தமிழ் மக்களின் துன்பங்களையும் முன்நிலைப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மக்கள் போராட்டத்தில்ன் சாணக்கியனின் புகைப்படம் பொறிக்கப்பட்ட பதாதை ஒன்றை சாணக்கியனும் சுமந்துகொண்டு ஊர்வலத்தில் கலந்துகொண்ட செயலானது, அந்த ஆர்ப்பாட்டதை ஏற்பாடு செய்திருந்த சிவில் சமூகத்தினரை முகம் சுழிக்கவைத்திருந்தது.

ஈழத்தமிழ் அரசியல் பரப்பில் அரசியல்வாதிகளின் பிம்பங்களை முதன்மைப்படுத்தி பிரச்சாரம் செய்யும் கலாச்சாரம் மிகமிக அரிதாகவே காணப்படுகின்றது. (தேர்தல் காலங்கள் விதிவிலக்கு) .

தந்தை செல்வாவை முதன்மைப்படுத்தி அல்லது மக்களுக்காக மிகுந்த அர்ப்பணிப்புகளைச் செய்துவிட்டு மறைந்த ஒரு தலைவரை முதன்மைப்படுத்தித்தான் பதாதைகள் அமைக்கப்படுவது வழக்கம். அதுவும் அவரது ஆதரவாளர்கள்தான் அதனைச் செய்வார்கள்.

ஆனால், சிவில் சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புக்கள், இயக்கங்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளும் ஒரு போராட்டத்தில் தன்னுடைய புகைப்படத்தை முதன்மைப்படுத்திய பதாதையை தானே சுமந்துசென்ற சாணக்கியனின் செயல் தமக்கு பெரிதும் கவலையளித்ததாக தெரிவித்தார் மட்டக்களப்பு சிவில் சமூகப் பிரதிநிதி ஒருவர்.

இது தமிழ் நாட்டு அரசியல் போன்று ஈழத்தமிழ் அரசியலையும் தரம் தாழ்த்தும்படியான ஒரு நடைமுறைக்கு வழிசமைத்துவிடும் என்றும் அவர் சுட்டிக்காண்பித்திருந்தார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக எத்தனையோ பிரயத்தனங்களைச் செய்த சாணக்கியன், தனது இந்தச் செயலினால் தமிழ் மக்களின் அதிருப்திக்கு உள்ளானது தனக்கு கவலையளிப்பதாகத் தெரிவித்திருந்தார் கிழக்கிலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒருவர்.