வவுனியா பட்டாணிச்சூர் பகுதிகளில் கொட்டப்படும் சட்டவிரோதமாக வெட்டப்படும் மாடுகளின் கழிவுகள்!

​வவுனியா பட்டாணிச்சூர் பகுதிகளில் சிலர் சட்டவிரோதமான முறையில் திருட்டு மாடுகள் வெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், அதன் கழிவுகள் பட்டக்காடு குளத்திற்கு அருகில் வீசப்பட்டு வருகின்றன.

இதனால் அப்பகுதியை சூழவுள்ள பகுதிகளில் துர்நாற்றம் வீசிவருகின்றது. அருகில் வசிப்பவர்கள் உட்பட வீதியால் செல்பவர்கள் எனப்பலரும் பல்வேறு அசௌகரியத்திற்குட்பட்டுள்ளதாகவும் இதனைக்கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சமூக ஆர்வலர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா பட்டாணிச்சூர் பகுதிகளில் சிலர் சட்டவிரோதமான முறையில் திருட்டு மாடுகள் வெட்டும் நடவடிக்கைகளில் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து நகரசபையினருக்கு பல்வேறு முறைப்பாடுகள் வழங்கப்பட்டும் எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை . அச்செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்படவில்லை. இவ்வாறு திருட்டுத்தனமாக வெட்டப்படும் சட்டவிரோதமான மாடுகளின் எச்சங்கள் மற்றும் கழிவுகள் அனைத்தும் உரைப்பையில் போடப்பட்டு பட்டக்காடு குளக்கட்டில் வீசப்பட்டு வருகின்றன .

இதனால் அவ்வீதியால் பயணிப்பவர்கள் , அயலில் வசித்து வருபவர்கள் எனப்பல்வேறு தரப்பினரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் . அத்துடன் இவ்வாறு வீசப்பட்டுவரும் கழிவுகளை கால்நடைகள் மற்றும் பறவைகளினால் வீதிகளில் ஆங்கங்கே இழுத்துவிடப்படுவதினால் துர்நாற்றம் வீசிவருகின்றதுடன் பட்டக்காடு குளம் மாசடைந்துள்ளது.

​எனவே இந்நடவடிக்கையினை கட்டுப்படுத்தி சட்டவிரோதமாக வெட்டப்படும் மாடுகளை தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மேலும் தெரிவித்துள்ளனர்.​