யாழில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட கைப்பையை திருடி அதிலிருந்த பண அட்டையை பயன்படுத்தி பெருந்தொகையான பணத்தை திருடிய ஆசாமி!

வல்வை முனியப்பர் ஆலயத்தில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட கைப்பை திருடப்பட்டு, அதிலிருந்த ஏடிஎம் அட்டை மூலம் பெருந்தொகை பணத்தை திருடிய ஆசாமிகளிற்கு பொலிசார் வலைவிரித்துள்ளனர்.

கடந்த 28ஆம் திகதி இந்த சம்பவம் நடந்தது.

பருத்தித்துறை நபர் ஒருவர் வல்வை முனியப்பர் ஆலயத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, ஆலய பூசைகளில் பூசகருக்கு உதவியுள்ளார்.

பூசை முடிய மோட்டார்சைக்கிளை எடுக்க சென்ற போது, ஆசனப்பகுதி கழற்றப்பட்டிருந்தது. அதிலிருந்த கைப்பை திருடப்பட்டிருந்தது.

அதற்குள் இருந்த 23,000 ரூபா பணத்துடன், அவரதும் மனைவியனதும் ஏடிஎம் அட்டைகளும் காணாமல் போயிருந்தன. அவற்றை பயன்படுத்தி பணம் திருடப்பட்டுள்ளது.

ஒரு அட்டையை பயன்படுத்தி 200,000 ரூபாவும், மற்றைய அட்டையை பயன்படுத்தி 90,000 ரூபாவும் திருடப்பட்டுள்ளன.

அச்சுவேலியுள்ள வங்கி தன்னியக்க இயந்திரத்தின் மூலம் பணம் திருடப்பட்டுள்ளது.

நெல்லியடி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.