இணையதளம் ஊடாக பொருட்கள் விற்பனை செய்வதாக கூறி மோசடி!

இணையதளம் ஊடாக பொருட்கள் விற்பனை செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டுவந்த நபர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம பகுதியில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இசைக் கருவிகள், கணினிப் பாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அறிவித்தல்களை பிரசுரித்ததனூடாக சந்தேகநபர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொருட்களை கொள்வனவு செய்வோரிடம் முற்பணத்தை வைப்பிலிடுமாறு வங்கிக் கணக்கும் சந்தேகநபரால் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.முற்பணமாக வைப்பிலிடப்பட்ட நிதியை சந்தேகநபர் மோசடி செய்துள்ளதாகவும் நாளாந்தம் 10,000 ரூபாவிற்கும் அதிக பணம் கொள்வனவாளர்களால் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இவ்வாறான மோசடியில் சிக்கியிருப்பின், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு தொலைபேசியினூடாக அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

0718 591 753 என்ற இலக்கத்தினூடாக முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நாத்தாண்டியா பகுதியை சேர்ந்த 29 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யும் போது சந்தேகநபரிடமிருந்து 6 தேசிய அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.