கொழும்பில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணம் என்ன ? – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேள்வி

கொழும்பில் திடீரென தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் உரிய அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்.

ஆரம்பத்தில் காணப்பட்டதைப் போன்று மேல் மாகாணத்தில் அபாய நிலைமை மீண்டும் அதிகரித்துள்ளது. ஞாயிறன்று நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 75 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டிருக்கிறார்கள் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுக்கே இதனை சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கூறுகையில் ,

இது வரையில் இனங்காணப்பட்டதை விட மிகக் கூடுதலானளவு தொற்றாளர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இனங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கொழும்பு மாவட்டம் முழுவதும் வைரஸ் தொற்று பரவியுள்ளமை தெளிவாகிறது. கொழும்பில் திடீரென இவ்வாறு தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்.

ஆரம்பத்தில் காணப்பட்டதைப் போன்று மேல் மாகாணத்தில் அபாய நிலைமை மீண்டும் அதிகரித்துள்ளது. ஞாயிறன்று நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 75 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டிருக்கிறார்கள்.

கொவிட் கட்டுப்படுத்தலில் நாம் மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம் என்பதற்கு சிறந்த உதாரணம் ஞாயிற்றுக்கிழமை 423 தொற்றாளர்கள் குணமடைந்துள்ள நிலையில் 843 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமையாகும்.

குணமடைபவர்களை விட இரு மடங்கு அதிகமான தொற்றாளர்கள் நாளொன்றுக்கு இனங்காணப்படுவார்களாயின் எதிர்வரும் காலங்களில் நிச்சயமாக சுகாதார கட்டமைப்பு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும்.

முதலாம் அலை தொடக்கம் கடந்த மாதம் வரை தொற்று அறிகுறிகளற்ற அபாயம் குறைவான தொற்றாளர்களே அதிகளவில் இனங்காணப்பட்டனர். ஆனால் தற்போது தொற்று அறிகுறிகளுடன் ஏனைய நாட்களை விட அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமை புதிதாக நாம் முகங்கொடுத்துள்ள சவாலாகும்.

தொற்று அறிகுறிகளுடன் தொற்றாளர்கள் இனங்காணப்படுவார்களாயின் அவர்களை இடை நிலை பராமறிப்பு நிலையங்களில் அனுமதிக்க முடியாது.

அவர்கள் கட்டாயமாக வைத்தியசாலைகளிலேயே அனுமதிக்கப்பட வேண்டும். எனவே வைத்தியசாலைகளில் கொவிட் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ள படுக்கைகளில் முழுமையாக பயன்படுத்தக் கூடிய கட்டத்தை அண்மித்துள்ளன. 

எனவே புதிதாக இனங்காணப்படும் தொற்றாளர்களை அனுமதிப்பதற்கு வைத்தியசாலைகயில் பாரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே இவ்வாறான நிலைவரங்களை இனங்கண்டு சரியாக மதிப்பீடு செய்து உரிய தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.