திருகோணமலையில் 99 மாணவர்கள் அதிரடியாக தனிமைப்படுத்தப்பட்டனர்!

திருகோணமலை நகரில் திருகோணமலை வலய கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட மூன்று பாடசாலையில் கல்வி கற்கும் 99 மாணவர்கள் நேற்று முதல் சுய தனிமைபடுத்தலுக்கு உட்பட்டதாக திருகோணமலை நகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்று திருகோணமலை நகரில் டைக் வீதியில் அடையாளம் காணப்பட்ட 14 கொவிட்19 தொற்றாளர்களில் ஒரு ஆசிரியர் மற்றும் இரு மாணவர்கள் இருந்ததை அடுத்தே மேற்படி சுயதனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் ஒரு பாடசாலையில் 3ம் ஆண்டு கல்வி பயிலும் 14 மாணவர்களும், மற்றைய பாடசாலையில் 11ம் ஆண்டு கல்வி பயிலும் 30 மாணவர்களும், இன்னொரு பாடசலையில் 2ம் ஆண்டு கல்வி பயிலும் 14 மாணவர்களும் அதே பாடசாலையில் 10 ஆண்டு கல்வி பயிலும் 21 மாணவர்களும் (24.01.2021 ) திகதி முதல் 14 நாட்கள் தங்களின் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் சுயதனிமைபடுத்தப்பட்டு 12 நாட்களில் 99 மாணவர்களுக்கும் பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன் மேற்குறிப்பிட்ட மாணவர்கள் படித்த பாடசாலை வகுப்புகள் மூடப்பட்டதுடன் கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கையை திருகோணமலை நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மேற்கொள்கின்றது.