யாழ் ஜாம்பவான்கள் நீதிமன்றங்களிற்கு போய் காணி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டியதுதானே: அங்கஜன்!

வேலணைப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று (25) இடம்பெற்ற போது, காணி சுவீகரிப்பிற்கு எதிராக போராட்டம் நடந்தது. வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மண்டைதீவு, மண்கும்பான் புங்குடுதீவு பகுதிகளில் 79 குடும்பங்களிற்கு சொந்தமான 50 ஏக்கர் காணிகளை கடற்படையினால் சுவீகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர், கூட்ட மண்டபத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்ட போராட்டம் நடந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், சட்டத்தரணி க.சுகாஷ் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் கூட்டத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பேச்சு நடத்தினார். ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு வருமாறும், அங்கு பேசலாம் என்றும் தெரிவித்தார். எனினும், அதை மறுத்த கஜேந்திரகுமார், மக்களிற்கான நிரந்தர தீர்வை வழங்கும்படி வலியுறுத்தினார்.

ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஆரம்பித்த போது, மக்களின் போராட்டத்திற்கு பதில் கூறிவிட்டு கூட்டத்தை ஆரம்பிக்கும்படி கஜேந்திரன் எம்.பி வலியுறுத்தினார். அவர்கள் போராடுகிறார்கள். அழைத்தேன். வரவில்லை. கூட்டத்தின் முடிவில் பேசுகிறேன் என அங்கஜன் தெரிவித்தார். கஜேந்திரன் விடாப்பிடியாக உடனடியாக அந்த விடயத்தை ஆராய வேண்டுமென கூறினார். அங்கஜன் மறுத்தார். இந்த இழுபறி நீடித்த போது, வேலணை பிரதேசசபையின் ஐ.தே.க, ஈ.பி.டி.பி உறுப்பினர்கள், அங்கஜனை காப்பாற்ற தலையிட்டனர்.

காணி விவகாரம் ஆராயப்பட்டு, அந்த காணி மக்களிற்கே வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரன், சிறிதரனும் வலியுறுத்தினர். பின்னர் காணி விவகாரம் ஆராயப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு ஆராயப்பட்டது. காணி உரிமையாளர்கள் கண்ணீருடன் தமது நிலைமையை தெரிவித்தனர்.

இதையடுத்து, அந்த காணிகள் மக்களிற்கே சொந்தமென்றும், அந்த நிலைப்பாட்டை சம்பந்தப்பட்ட அமைச்சிற்கு அறிவிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

“காணி சுவீகரிப்பு இந்த அரசாங்கத்தில் மட்டும் நடக்கவில்லை. சென்ற அரசாங்கத்திலும் இச் செயற்பாடு இடம்பெற்றது. எமது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத நில ஆக்கிரமிப்பினை அபிவிருத்திக்குழுத் தலைவர் என்ற அடிப்படையில் நிச்சயமாக சம்பந்தப்பட்ட அமைச்சிற்கு இச் செய்தியை கொண்டு செல்வேன். நில ஆக்கிரமிப்பு செயற்பாடு பிரதேச செயலரால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயத்தை செய்ய முடியாது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் உரிய தரப்பினரை வலியுறுத்துவோம்.

எனினும், மற்றொரு வழியிலும் இந்த பிரச்சனையை தீர்க்கலாம். காணிப்பிரச்சனை பற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். இங்கு நிறைய ஜாம்பவான்கள் உள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணிகளான அந்த ஜாம்பவான்கள் உள்ளனர். ஏன் இந்த போராட்டத்திலும் அந்த ஜாம்பவான்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றங்களில் வழக்குகளை தொடர்ந்து தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

அந்தவகையில் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாட்டினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இப் பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீர்மானம் ஒன்றினையும் நிறைவேற்றுவோம் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.