மேலும் 332 பேருக்கு கொரோனா!

கொவிட் 19 தொற்று மேலும் 332 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் கடந்த 12 மணி நேர காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் மற்றும் ரெபிட் எண்டிஜன் பரிசோதனைகளில் 15 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் இதனை தெரிவித்தார்.

அதனடிப்படையில், கிண்ணியா, திருகோணமலை, கல்முனை தெற்கு, உப்புவெளி, மட்டக்களப்பு, காரைத்தீவு மற்றும் காத்தான்குடி ஆகிய பிரிவுகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிவப்பு வலயங்களாக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், மன்னார் மாவட்டத்தில் கடந்த 18 நாட்களில் 49 கொவிட் 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

இதேவேளை, இங்கிலாந்து கிரிக்கட் குழாமினர் தங்கியிருந்த காலி – தடல்லவில் உள்ள விருந்தகத்தில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

காலி மற்றும் கேகாலை பகுதிகளை சேர்ந்த விருந்தக சேவையாளர்கள் இருவருக்கே இவ்வாறு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி குறித்த விருந்தகத்தின் சமையலறை பகுதியில் பணிப்புரிந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுறுதியானது.

இதனையடுத்து அந்த விருந்தகத்தில் 98 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே புதிதாக இரண்டு கொவிட் 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 649 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 820 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டிற்கு வருகைத்தந்துள்ள யுக்ரைனின் 45 சுற்றுலாப்பயணிகளும் இன்றைய தினம் சீகிரியா குன்றினை பார்வையிட்டனர்.

மத்திய கலாசார நிதியத்தின் சீகிரிய திட்ட அலுவலக அதிகாரிகளால் அவர்கள் வரவேற்கப்பட்டதாகவும் எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

சுற்றுலாப்பயணிகளுக்கு காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.

இரண்டு குழுக்களாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுற்றுலாப்பயணிகள் சீகிரிய குன்றினை பார்வையிட்டதாகவும் எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு வருகைத்தந்த யுக்ரைன் சுற்றுலாப்பயணிகளுக்கு இதற்கு முன்னர் சீகிரியா மற்றும் பொலனறுவையை பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், அது கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.