
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காயான்கேணி புல்லாவி சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இறாலோடையில் இருந்து வாகரை நோக்கி பயணமாக மோட்டார் சைக்கிள் புல்லாவி சந்தியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மின்கம்பத்தில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் படுகாயமடைந்துள்ளார்.
இதில் மோட்டார் சைக்கிளின் பின் பக்கமாக இருந்து வந்த இறாலோடை காயான்கேணியை சேர்ந்த தியாகராஜா கனுஜன் வயது 18 என்பவர் மரணமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளினை செலுத்தி வந்த இறாலோடை காயான்கேணியை சேர்ந்த செல்வந்திரன் கேதுஜன் வயது 19 என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்தவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.