
சுகாதார அறிவுறுத்தல்களை மீறி அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் மூன்று தனியார் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.
காலி நகரில் பொலிசார் இவர்களை கைது செய்தனர். சுமார் ஒரு மாதத்தின் பின்னர் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டு, பொதுப் போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்போது, பொதுப்போக்குவரத்தில் ஈடுபடுபவர்களிற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
பேருந்தில் பயணிக்கத்தக்க எண்ணிக்கையை விட, அரைவாசி எண்ணிக்கையினரையே ஏற்ற வேண்டுமென கூறப்பட்டபோதும், பேருந்துகளில் மக்களை அடைந்து கொண்டு சென்ற மூன்று பேருந்து சாரதி, நடத்துனர்களே கைது செய்யப்பட்டனர்.
நாட்டின் பல பாகங்களிலும் பொதுப்போக்குவரத்து சேவைகளை இன்று சுகாதாரத்துறையினரின் ஒத்துழைப்புடன் பொலிசார் சோதனை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மீது தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காலி போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.