
திருகோணமலையில் இருமல் காணப்பட்டமையினால் கொரோனாவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வயோதிபர் ஒருவர் வீட்டிலிருந்து சென்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்டவர் திருகோணமலை, பூம்புகார் வீதி, அம்பியர் லேன் பகுதியைச் சேர்ந்த பெருமாள் சோலைமுத்து வயது 70 எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வயோதிபர் கடந்த 16ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் இன்று மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
விறகு வெட்டுவதை தொழிலாகக் கொண்ட இவர் தொய்வு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இருமல் மற்றும் தடிமல் காணப்பட்டதாகவும் இதனையடுத்து இவரை பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியதை அடுத்து கடந்த 16ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.
இந்த நிலையில் இவரது மகன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து விறகு வெட்டச் செல்லும் காட்டு பகுதிகளில் தேடிய போது மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாகவும் சடலத்தை திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ. எஸ். எம். ரூமி சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்குட்படுத்துமாறு பொலிசாருக்கு கட்டளையிட்டார்.
தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலம் தற்போது சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.