சமூக பரவலானால் எம்மால் கட்டுப்படுத்த முடியாது – தொற்றுநோய் தடுப்பு பிரிவு எச்சரிக்கை

கொவிட் -19 வைரஸ் தொற்று பிரதான இரண்டு கொத்தணிகளில் இருந்தே நாடு பூராகவும் வேகமாக பரவிக்கொண்டுள்ளது, எனினும் இன்னமும் சமூக பரவலுக்கு வரவில்லை என தெரிவிக்கும் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுத்த சமரவீர, சமூக பரவலாக மாறினால் அதன் பின்னர் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவே முடியாது போய்விடும், எனவே மக்கள் பொறுப்புகளை உணர்ந்து செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

தற்போது வரையில் இலங்கையில் சகல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டாலும் கூட அவர்கள் அனைவருமே மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புபட்ட நபர்களாகவே உள்ளனர். ஏதோ ஒரு விதத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இவர்கள் குறித்த இரண்டு பிரதான கொத்தணிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற காரணத்தினால் இன்னமும் சமூக பரவலாக இது மாறவில்லை என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம்.

இந்த கொத்தணிகள் நாட்டில் சகல பகுதிகலைக்கும் சென்றடைந்துள்ளது. வைரஸ் தொற்றின் வேகம் அதிகம் என்பதை நாம் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றோம். இவ்வாறான நிலையில் எம்மால் மாத்திரம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது. மக்கள் முறையாக சுகாதார வழிமுறைகளை கையாள்வதும், தொடர்புகளை குறைப்பதும் அவசியமானதாகும். குறைந்த காலத்தில் அதிகளவில் தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவே இது சமூக பரவலானால் அதன் பின்னர் எம்மால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவே முடியாது போகும்.

கொத்தணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது, இதனையே நாமும் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றோம். பிரதான இரண்டு கொத்தணிகளின் தாக்கமே நாடு பூராகவும் பரவியுள்ளது. அவ்வாறு இருக்கையில் புதிய கொத்தணி உருவாகும் நிலைமையில் தாக்கங்கள் மோசமானதாக அமையும்.

எனவே மக்கள் மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும். மக்களின் ஒத்துழைப்புக்களே இதன்போது மிகவும் அவசியமானதாக நாம் கருதுகின்றோம். நாட்டில் பிரதான கொத்தணிகள் உருவாக்கியுள்ள பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிலைமைகளை மக்கள் தவறாக பயன்படுத்திக்கொண்டு அனாவசிய செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம். மக்களின் பொறுப்பான செயற்பாடுகளே முக்கியமானதாக கருதுகின்றோம் என அவர் தெரிவித்தார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com