மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறியவர்களுக்கான அறிவிப்பு

மேல்மாகாணத்தில் இருந்து ஒக்டோபர் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் வெளியேறி வேறு பிரதேசங்களுக்கு சென்றவர்களை சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர்கள் வெளியேறி தற்போது தங்கியுள்ள பகுதிகளில் வைத்து 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 29, 30 ஆம் திகதிகளில் குளியாப்பிடிய மற்றும் மேல்மாகாணதத்தில் இருந்து வெளியேறியவர்களே இவ்வாறு 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த 29 ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட இருந்த நிலையில், மேல் மாகாணத்திலிருந்து எவரும்  வெளியேறி வேறு பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாமென ஊரடங்கு அமுல் படுத்தப்படுவதற்கு முன் பொலிஸார் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஆனால், தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக மேல் மாகாணத்தில் இருந்த பெருந்தொகையாளோர் பொலிஸாரின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்காது மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

இவ்வாறு வெளியேறியவர்களை கண்டுபிடிப்பதற்கான விஷேட நடவடிக்கை ஒன்றை பொலிஸார் நேற்று முதல் முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் அடுத்த கட்டமாகவே, இவ்வாறு மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய அனைவரையும் அவர்கள் தற்போதுள்ள இடங்களிலேயே 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com