இந்த மரத்தின் காற்றுப் பட்டாலே வியாதிகள் எல்லாம் தீரும்!

தலமரங்கள் என்று சில மரங்களை, நாம் திருக்கோவில்களில் கண்டிருப்போம், அவை மட்டும் ஏன் தல மரங்கள் என்று போற்றப்படுகின்றன? அதற்கு என்ன காரணம்? இதுபோல நிறைய கேள்விகள் நம்மில் எழுந்தாலும், வாழ்வில் விடை கிடைக்காத ஓராயிரம் கேள்விகளுள் இதுவும் ஒன்று என நம்மை நாமே தேற்றிக்கொண்டு, கோவிலில் கிடைக்கும் பிரசாதத்தை சாப்பிட்டு விட்டு, வீடு திரும்புவோம்!

தற்காலங்களில் நாம் பருகும் நிலத்தடி நீரில் சில இடங்களில், கால்சியம் அதிகரித்துள்ளது என்பதையும், சில இடங்களில், குளோரின் கூடுதல், சில இடங்களில் அயோடின் அதிகம் உள்ளது என்பதை ஆய்வுகளில் இருந்து அறிந்திருப்போம்!

உடலுக்கு கெடுதல் தரும் அளவில் உள்ள அந்த தாதுக்கள் நிறைந்த நீரை பருகுவதாலே, உபயோகிப்பதாலே, மனிதர்க்கு பல உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதை, செய்திகள் வாயிலாக நாம் அறிந்திருப்போம்.

இக்காலங்களில் மண் பரிசோதனை செய்து, நிலத்தில், தண்ணீரில் உள்ள நிறை மற்றும் குறைகளை அறிந்து, அதற்கேற்ப பாதிப்புகளை சரிசெய்து கொள்கிறோம்!

முன்னோரின் இயற்கை விஞ்ஞானம்!

இயற்கையின் நன்மைகளை, இறைவனுடன் கலந்து வைத்து, இயற்கையையும் வழிபாட்டில் வைத்தார்கள். கோவில் இல்லாத ஊரில்லை எனும் தமிழ்நாட்டில், எல்லா கோவில்களிலும், மூலவர் எனும் கோவிலின் நாயகரோடு, இறைவி, பரிவார தேவதைகள் எனும் பல கடவுள் உருவங்கள் வழிபடப்பட்டு வந்தாலும், அந்த கோவிலின் தல மரமாக, ஒரு தொன்மையான மரம் திகழும். அதுவே, அந்த ஊர் மக்களுக்கு மிகவும் தேவைப்படும் ஒன்றாக, சுவாசிக்க காற்றாகவும், மருந்தாக உண்ணயும் பயன் தரும் என்பதை நாம் அறிய வாய்ப்பில்லை.

நாம் சில இடங்களில் உள்ள தண்ணீரைப்பற்றி அறிவோம், அந்த பகுதியில் உப்புத்தண்ணீர், வெள்ளை நிற ஆடைகள் எல்லாம், பழுப்பு நிறமாகிவிடும், “அஃகுவா” பயன்படுத்திதான், நீரைப் பருக வேண்டும், என்று சொல்லிக்கொள்வோம், அல்லவா!

அதுபோல, முன்னோர்களும், குறிப்பிட்ட சில இடங்களில் உள்ள பாதிப்புகளை அறிந்து அவற்றை நேரடியாக சொல்லாமல், தீர்வாக கோவில்களில் தல மரங்கள் என்ற பெயரில் வைத்து, அவற்றை வணங்கி சுற்றிவரச் செய்வர்.

ஆன்மீகத்தின் பேரிலேயே, மனிதர் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நியதிகளை பெரியோர் வகுத்திருந்தனர். அத்தகைய ஒரு நியதியாகத் திகழும் தல மரங்களின் வரிசையில், கிளுவை மரத்தைப் பற்றியும் அதன் சிறப்பைப் பற்றியும் அறிவோம்.

மரங்கள் பிராணவாயு தர மட்டுமல்ல! நிழலில் அமர, வியாதியையும் தீர்க்கும்!

சில மரங்களின் நிழலில் அமரும்போது, வியாதிகள் சரியாகிவிடும். அந்த மரங்களின் இதமான காற்று, உடலில் படும்போது, அந்த மரத்தின் காற்றால் சரியாகக்கூடிய வியாதிகள் விலகிவிடும், என்பதை முன்னோர் பெரு மக்கள் நன்கு உணர்ந்தே, அத்தகைய மரங்களை தல விருட்சங்களாக, கோவில்களில் வளர்த்தனர்.