இலங்கையில் செயலிழந்து போன பி.சி.ஆர் இயந்திரத்தை சரி செய்ய இலங்கை வந்தது சீன வல்லுநர்கள் குழு!

இலங்கையில் செயலிழந்து போன பி.சி.ஆர் இயந்திரத்தை சரி செய்வதற்கான வல்லுநர்கள் குழு இன்று இரவு சீனாவிலிருந்து வந்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.

இது குறித்து கொழும்பில் உள்ள சீன தூதரகம் டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இலங்கை வந்துள்ள வல்லுநர்கள் அனைத்து பி.சி.ஆர் இயந்திரங்களையும் சரிபார்த்து பராமரிப்பார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் வெளிப்படையான கோரிக்கையினை ஏற்று இந்த வல்லுநர்கள் குழு இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் சீன பி.சி.ஆர் இயந்திரம் செயலிழந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அண்மையில் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் முக்கிய பி.சி.ஆர் பரிசோதன இயந்திரமாக விளங்கும் இந்த இயந்திரம் ஒரு நாளைக்கு 1200 பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது.

இயந்திரத்தின் செயலிழப்பு காரணமாக சில பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகளைப் பெறுவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.