திருகோணமலை தனிமைப்படுத்தல் முகாம்களில் நடக்கும் அலங்கோலங்கள்!

திருகோணமலையில் – ஈச்சிலம்பற்று மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எந்த வசதிகளும் இல்லை என அங்குள்ள தொற்று நோயாளி ஒருவர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பகுதியில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற கொரோனா தொற்று நோயாளிகள் தங்களுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை என்றும், தமக்கு கிடைக்கின்ற உணவுகள் உண்ண முடியாத அளவிற்கு கெட்டுப்போனதாகவும் கூறுகிறார்கள்.

மேலும், தொற்று நோயாளர்களுக்கு வழங்கப்பட்ட மண்டபத்தில் நான்கு கழிப்பிட வசதிகளே காணப்படுவதாகவும், அதுவும் சுத்தமாக காணப்படுவதில்லை எனவும், அங்கு உள்ளவர்களில் நூற்றில் இரண்டு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, குறித்த நோயாளிகளின் இரத்தமாற்றம் மற்றும் பிற பரிசோதனைகளுக்கு மருத்துவர்கள் முறையாக வராமல் இருப்பதாகவும் , அவர்கள் தாமே பரிசோதிப்பதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன், ஒரே மண்டபத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளர்கள் எந்தவித சுகாதார நடைமுறைகளையும் கடைபிடிக்காமல் மிக நெருங்கிய இடைவெளியில் அவர்களுக்கான படுக்கைகள் காணப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனை கவனத்திற் கொண்டு உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அங்கு பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், இதற்கான 16 வீடியோ ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் குறித்த தொற்றாளர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.