எதிர்வரும் இரு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காகுமாம் : அமைச்சர் பவித்திரா!!

கொரோனா குறித்து, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியின் தலைமையில் மருத்துவ கல்லூரி தலைவர்களது பங்குபற்றலுடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன் போது சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, கொரோனா வைரஸ் பரவலானது எதிர்வரும் இரு வார காலத்திற்குள் இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில்.

இரு வார காலத்திற்கும் மேலதிகமாக தேவையேற்படின் இதே போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும், அதற்கேற்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறினார்

பொது போக்குவரத்தின் போது சமூக இடைவெளியுடன் பயணிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து, அவற்றை முழு நாட்டிலும் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி செயலணிக்கு தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ராஜசிங்க இதன் போது தெரிவித்தார்.

மேலும், விசேட வைத்தியர் மகேஷ் ஹரிஸ்சந்திர கருத்து தெரிவிக்கையில், ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கப்படும் சந்தர்ப்பங்களில் அசௌகரியமின்றி பொது மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் பாதிக்கப்பட்டோரை இனங்காண்பதற்கும் முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

அதில், இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த பேராரிசியர் இந்திக கருணாதிலகவினால் பொதுமக்களுக்கு தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதை விடவும் எதிர்காலத்தில் அதிகளவான நிர்வாகம் அத்தியாவசியமாகும் என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், இம் மாதம் 20 ஆம் திகதி வரை இரு வார காலத்திற்கு வைரஸ் தொற்று பரவலானது இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 14 நாட்களுக்கு விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, புலனாய்வுதுறையினர் ஊடாக தேவையான தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டு தொற்று நோயியல் பிரிவினால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இது வரையில் கொரோனா வைரஸ் சிகிச்சைகளுக்காக அத்தியாவசிய தேவைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், முல்லேரியா வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவினை மேலும் விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அத்தோடு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு Mobile CT Scanner இயந்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கும் துரிதமாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சரினால் பதில் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com