இலங்கையில் சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கு கட்டுப்பாடு

26 நாள்களின் பின்னர் ஊரடங்கு தளர்த்தப்படுவதன் காரணமாக பெருமளவானோர் சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கு வரக்கூடும் என்பதால், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையால் பல்வேறு இறுக்கமான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரனால், வடக்கின் 5 மாவட்டச் செயலர்களுக்கும் சிறப்பு அறிவித்தல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நீண்ட நாள்களாக நடைமுறையிலிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதால் பெருமளவானோர் சிகை அலங்கரிப்பு நிலையங்களை (சலூன் களை) அணுகவுள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலையாகும்.

கொரோனா தொற்று ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக பின்வரும் நடைமுறைகளை நடைமுறைப்படுத்துமாறு தங்களது பிரதேச செயலர்களுடாக சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

சலூன்களுக்குள் இருவருக்கிடையில் ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணவும். முடி திருத்துநர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.

முடி திருத்துநர்கள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்குமிடையில் கைகளை சரியான முறையில் ஓடும் நீரில் சவர்க்காரம் கொண்டு கழுவ வேண்டும்.

மொத்தமாக பணியில் உள்ள முடி திருத்துநர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாடிக்கையாளரை உள்ளே அனுமதிக்கவும். உதாரணமாக முடி திருத்துநர்கள் இருவர் பணியில் இருந்தால் முடி வெட்டிக் கொண்டிருப்பவர்கள் இருவரும் காத்திருப்பவர் இருவரும் என்று நான்கு வாடிக்கையாளர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கவும். கடையின் அளவு சிறிதாயின் காத்திருக்கும் வாடிக்கையாளரின் எண்ணிக்கையை மேலும் குறையுங்கள்.

ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் பாவிக்கும் உபகரணங்கள் அனைத்தையும் ‘ஸ்பிறிற்’ மூலம் அல்லது கொதிக்கும் நீரில் அமிழ்த்தி தொற்று நீக்கம் செய்யவும். தொற்று நீக்கம் செய்ய முடியாத உபகரணங்களைப் பாவிப்பதை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுங்கள். போர்வை, துவாய், பிளேட் போன்றவற்றை வழமைபோல் ஒருவருக்கு ஒன்று எனப்பாவிக்கவும். பிளேட்டை ஒருவருக்குப் பாவித்த பின் எறியவும். துவாய்கள், போர் வைகளை தோய்த்து உலர்ந்த பின்பே பாவிக்கவும். இந்த அறிவுறுத்தல்களை தங்கள் மாவட்டத்தின் பிரதேச செயலர்கள் ஊடாக சகல சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கும் அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன், என்றுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com