தோண்ட தோண்ட கிடைத்த டைனோசர் முட்டைகள்!

பெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் ஒரு இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்- அரியலூர் சாலையிலுள்ள குன்னம் கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெங்கட்டான் குளத்தில் வண்டல் மண் எடுத்த போது இந்த படிமங்கள் கிடைத்துள்ளன.

மாமிச உண்ணியான கார்னோசர் மற்றும் இலைகளை மட்டும் உண்ணும் சௌரபோட் டைனோசர்களின் முட்டைகள், கடல் ஆமை, கடல் நத்தை, கடல் சங்கு உள்ளிட்ட பல்வேறு கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கல் மரங்களின் படிமங்கள் இவற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த டைனோசர் முட்டைகள் சுமார் 12 கோடி முதல் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.