
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு மே மாதம் 3 ஆம் திகதி வரை அமலில் இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் உணவகங்கள், மீன், இறைச்சி, மளிகை கடைகள் என அனைத்து வகை கடைகளும் செயல்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் வீடுகளிலேயே இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த ஊரடங்கு காரணமாக பறவைகளும், விலங்குகளும் உணவின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நகரங்களில் உள்ள மரங்களில் கூடுகள் அமைத்து வாழும் பறவைகள் பெரும்பாலும் மனிதர்களால் கிடைக்கும் உணவுகள் மற்றும் தண்ணீரை நம்பியே உள்ளன.
தற்போது ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் வெளியே நடமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பறவைகளும், விலங்குகளும் தண்ணீர், உணவின்றி உயிரிழந்து வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தண்ணீர் மற்றும் உணவின்றி காகங்கள், புறாக்கள் உள்ளிட்ட பல பறவைகள் சாலையில் உயிரிழந்து கிடக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கால்நடை பராமரிப்பு துறையினரும், விலங்குகள் நல ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.