ரிஷாத்தின் ரீட் மனு நவம்பர் 6 வரை ஒத்திவைப்பு

தான் கைதுசெய்யப்படுவதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனுத் தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவானது எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

சிரேஷ்ட  சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக அவர் இந்த மனுவினை தாக்கல் செய்திருந்த நிலையில், அம்மனு மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான குமுதினி விக்ரமசிங்க மற்றும் சோபித்த ராஜகருணா ஆகியோர் முன்னிலையில் இன்று ஆராயப்பட்டது.

இதன்போது, மனுதாரரான ரிஷாத் பதியுதீன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மன்றில் ஆஜரானதுடன், சந்தேக நபரை கைதுசெய்ய சட்ட மா அதிபருக்கு இவ்வாறான உத்தரவுகளை பிறப்பிக்க அதிகாரம் இல்லை என வாதிட்டார்.

எவ்வாறாயினும்,  தற்போதும் மனுதாரர் கைது செய்யப்பட்டுள்ளதால், இந்த ரிட் மனுவை முன்னெடுத்து செல்வதா இல்லையா என்பது தொடர்பில் மனுதாரரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அதற்கு கால அவகாசம் வழங்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா கோரினார். 

இதனை ஆராய்ந்த இருவர் கொன்ட நீதிபதிகள் குழாம் அதற்கு அனுமதியளித்து,  மனுதாரர் தரப்பு நிலைப்பாட்டை அறிந்துகொள்ள மனுவினை எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com