ஏழுமலையான் 12,000 கோடி பணத்தை மீண்டும் வங்கிகளில் முதலீடு செய்ய திட்டம்?

ஏழுமலையான் பணத்தை மீண்டும் வங்கிகளில் முதலீடு செய்ய உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சனிக்கிழமை இரவு அறிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் 12,000 கோடி ரூபாயை வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள், வளா்ச்சிப் பணிகளை செய்து வருகிறது.

தற்போது தேவஸ்தானத்திடம் 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் உள்ளன. ஆனால் கொவிட்- 19 பாதிப்பால் வங்கிகளின் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதால், தேவஸ்தானம் வங்கிகளில் உள்ள முதலீடுகளை மத்திய, மாநில அரசுகளின் செக்யூரிட்டி பாண்டுகளுக்கு மாற்ற முடிவு செய்து, அதற்காக அரசாணை எண்ணையும் வெளியிட்டது.

இதன் மூலம், 7 சதவீதம் வட்டி கிடைக்கும் என்று தேவஸ்தானம் கருதியது. ஆனால், இதற்கு ஆந்திர எதிா்க்கட்சிகள் மற்றும் ஹிந்து மத அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்தன.

இதை அடுத்து தேவஸ்தானம் மத்திய, மாநில அரசுகளின் செக்யூரிட்டி பாண்டுகளில் செய்யவிருந்த முதலீடுகளை ரத்து செய்து, மீண்டும் வங்கிகளில் அவற்றை முதலீடு செய்ய உள்ளதாக சனிக்கிழமை இரவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், முதலீடுகளின் மீதான வட்டி விகிதத்தை அதிகரிப்பதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளதால், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.