பிரபல தெலுங்கு நடிகர் குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா உறுதி!

பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் குடும்பத்தாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு படவுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் ராஜசேகர். இவரது மனைவி ஜீவிதா. இவர்கள் இருவருமே ஆரம்ப காலகட்டத்தில் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளனர். இந்தத் தம்பதியின் மகள்களான சிவாத்மிகா மற்றும் சிவானி இருவருமே நடிகைகளாவர்.

புதிய படமொன்றின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள நடிகர் ராஜசேகர் சமீபத்தில் தயாராகி வந்துள்ளார். ஆனால் கடந்த வாரம் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கரோனா பாதிப்பு இருப்பதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் தென்பட்டு உள்ளன. இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

அதன் முடிவில் அனைவருக்குமே கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தெலங்கானாவின் ஐதராபாத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை முடிவில் அவர்களில் சிவாத்மிகா மற்றும் சிவானி இருவரும் தற்போது குணமடைந்து உள்ளனர்.

இதுபற்றி நடிகர் ராஜசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், எனக்கும், ஜீவிதா மற்றும் எங்களது குழந்தைகளுக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டோம். இதில் எனது இரு குழந்தைகளும் குணமடைந்து விட்டனர். நானும் ஜீவிதாவும் நலமுடனே இருக்கிறோம். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவோம் என்று பதிவிட்டுள்ளார்.