யாழ் சாவகச்சேரி சுமைதாங்கிக் கற்கள்!

ஒளிப்படத்தில் இருப்பவை சுமைதாங்கிக் கற்கள், அலுவலகப் பணியின் நிமிர்த்தமான பயணத்தில் கண்டு கொண்டவை, சாவகச்சேரியின் நுணாவில் சந்தியில் இருந்து கனகம் புளியடிச் சந்திக்குச் செல்லும் வீதியின் அருகில் ஒரு ஆலயத்தை அண்மித்த பகுதியில் இச் சுமைதாங்கிக் கல் அமைந்திருக்கிறது.
ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளச் சின்னங்களில் இச் சுமைதாங்கிக் கற்கள், ஆவுரஞ்சிக் கல், தெருமூடி மடம், சங்கடப் படலை ஆகியவை ஒன்றிற்கொன்று நெருங்கிய தொடர்பினைக் கொண்டவை.
மோட்டார் போக்குவரத்து நடைமுறையில் இல்லாத காலத்தில் கால்நடை மற்றும் வண்டில் பயணங்களே பெரும்பாலும் புழக்கத்தில் இருந்து வந்தது, இந்நிலையில் நெடுந்தூரப் பயணங்களை மேற்கொள்கின்ற பயணிகள் தங்கி இழைப்பாறிச் செல்வதற்கு தெருமூடி மடங்களும், சங்கடப் படலைகளும் உதவின, அதேநேரம் வண்டில் மாடுகளும் பசுக்களும் தமது உடலில் எழும் உபாதைகளை உரஞ்சித் தீர்த்துக் கொள்வதற்கு ஆவுரஞ்சிக் கற்கள் உதவின.
அதேநேரம் கால்நடையாக நடந்து செல்லும் பயணிகள் தலையில் சுமந்துவரும் தங்களுடைய சுமைகளை இறக்கிவைத்து இழைப்பாறுவதற்கு இவ்வகை சுமைநயதாங்கிக் கற்கள் உதவின, ஒன்று இரண்டு மூன்று என்று அடுக்குகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் இவற்றின் உயரத்திற்கு ஏற்ப பயணிகள் சுமைகளை இறக்கி வைத்துக் கொள்ளலாம்.
இங்கு நான் கண்டுகொண்ட சுமைதாங்கியின் வீதியை நோக்கிய பக்கச் சுவரில் உட்குடைந்த புடைப்பு ஒன்றும் காணப்படுகின்றது. பாதசாரிகளுக்காக விளக்கேற்றி வைக்கும் இடமாக அது பயன்பட்டிருக்கலாம். கனகம்புளியடிச் சந்தியில் இருந்து புத்தூர், வடமராட்சி, வலிகாமம், சாவகச்சேரி என்று பல பிரதேசங்களுக்குச் செல்லும் வீதிகள் பிரிந்து செல்வதால் இப்பகுதியில் உள்ள இந்த சுமைதாங்கிக் கல் அக்காலத்தில் முக்கிய பணியினை ஆற்றியிருக்கலாம்.
இவ்வகைச் சுமைதாங்கிகளை அமைப்பதன் பின்னும் சில கதைகள் காணப்படுகின்றன. முன்னைய காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் பிரசவ காலத்தில் இறக்க நேரிடுகின்ற போது அவர்களின் நினைவாக இவ்வகை சுமை தாங்கிக் கற்களை அமைக்கும் முறை புழக்கத்தில் இருந்து வந்ததாம்.
இச்சுமைதாங்கிக் கற்கள் இங்கு மட்டுமன்றி வடமராட்சி மற்றும் ஆனையிறவினூடாக பரந்தனிற்குச் செல்லும் ஊரியான் பாதையிலும் காணப்படுகின்றன. வடமராட்சியில் அமைந்துள்ள ஒரு கல்லில் தொல்லியல் திணைக்களத்தின் குறியீட்டோடு அச்சுமைதாங்கிக் கல் வெய்யிலிலும் மழையிலும் குளித்துக் கொண்டு கிடக்கிறது, வானிலையால் அழிதல் செயற்பாட்டின் காரணமாக ஏற்கனவே சிதைவடைந்துள்ள அக் கல் இன்னும் எவ்வளவு காலத்திற்கு நிமிர்ந்து நிற்கும் என்பதைச் சொல்லத் தெரியவில்லை.
இப்படியான மரபுரிமை சார்ந்த எங்களுடைய அடையாளங்கள் தென்படுமிடத்து, அதை அவர்கள் செய்வார்கள் இதை இவர்கள் செய்வார்கள் என்று காத்திருக்காமல் ஊர்மக்களே முன்னின்று முயற்சித்தல் இருப்பை இழக்காதிருப்பதற்கான மற்றுமொரு வழி!
அதுவே இப்போதைய தேவையும் !