65 வயது தலித் இன முதியவர் ஒருவரை மிரட்டி சிறுநீர் குடிக்க வைக்க முயற்சித்த கொடூரம்!

 உத்தர பிரதேசத்தின் லலித்பூரில் ரோடா என்ற கிராமத்தில் வசித்து வரும் 65 வயது தலித் இன முதியவர் ஒருவர், சோனு யாதவ் என்பவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை திரும்ப பெற வேண்டும் என்று கூறி கோப்பையில் இருந்த சோனுவின் சிறுநீரை முதியவருக்கு கொடுத்து குடிக்கும்படி சோனு கட்டாயப்படுத்தி உள்ளார். இதற்கு மறுத்த முதியவரை சோனு கம்புகளை கொண்டு அடித்து தாக்கியுள்ளார்.

இதுபற்றி அந்த முதியவர் கூறும்பொழுது, கடந்த சில நாட்களுக்கு முன் எனது மகனை கோடாரியால் சோனு தாக்கினார். இதுபற்றி போலீசில் நாங்கள் புகார் அளித்தோம். அதனால் சமரசம் ஆக போகும்படி, சோனு தொடர்ந்து எங்களை துன்புறுத்தி வருகிறார் என்று கூறினார்.

இந்த சம்பவம் பற்றி லலித்பூர் எஸ்.பி. மிர்சா மன்ஜார் பெக் கூறும்பொழுது, அதிகாரத்தில் இருக்கும் சிலர் ரோடா கிராமவாசிகள் 2 பேரை தாக்கியுள்ளனர். இதுபற்றி அறிந்ததும் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

முக்கிய குற்றவாளியை கைது செய்து விட்டோம். இந்த புகாரில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களை நாங்கள் சகித்து கொள்வதில்லை என்று அவர் கூறினார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com