
யாழில் இடம்பெற்ற சுவிஸ் மதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட நிலையில் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 8 பேரின் இரத்த மாதிரிகள் இரண்டாவது தடவையாகவும் பெறப்பட்டு கொரனா தொற்று பரிசோதனைக்காக யாழிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வவுனியா பொது சுகாதார துறையினரால் குறித்த இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 15 ஆம் திகதி யாழ் அரியாலையில் இடம்பெற்ற சுவிஸ் மத போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட நிலையில் யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பகட்டிருந்த வவுனியா வைத்தியசாலை ஊழியருக்கு கடந்த செவ்வாய் கிழமை கொரனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், வவுனியா, காத்தான் கோட்டம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவரது குடும்பம், யாழ் தாவடியில் உள்ள கொரனா தொற்றாளருடன் தொடர்பை பேணிய நிலையில் ஓமந்தை அரச வீட்டுத் திட்ட பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு குடும்பம்,

யாழ் மத போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட புளியங்குளம் முத்துமாரி நகர் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 குடும்பங்கள் என்பவற்றில் குறித்த குடும்பங்களில் இருந்து ஆராதனையில் கலந்து கொண்ட மற்றும் நேரடி தொடர்பில் இருந்த 8 பேரின் இரத்த மாதிரிகள் சுகாதார துறையினரால் இரண்டாவது தடவையாக பெறப்பட்டு கொரனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்காக யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவர்களிடம் கடந்த கடந்த 8 ஆம் திகதியும் இரத்தமாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன்போது நோய் தொற்றுக்கான எந்தவித அறிகுறிகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.