ஈஸ்டர் பயங்கரவாதம்; தீவிர விசாரணைக்குள் ஹிஸ்புல்லா, ரியாஜ்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் சிஐடியின் பிரதான விசாரணைக் குழுவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன், சிரேஷ்ட சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட 6 பேரிடம் விஷேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள 6 சந்தேக நபர்களில் பலர், ஷங்கரில்லா மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய மொஹமட் இப்ராஹீம் இல்ஹாம் அஹமட் மற்றும் மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட் ஆகியோருடன் தொடர்பில் இருந்துள்ளமை தொலைபேசி பகுப்பாய்வு ஊடாக தெரியவந்துள்ளதாகவும் அதன்படி தீவிர விசாரணைகள் இடம்பெறுவதாகவும் சிஐடி தகவல்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் குண்டுத் தாக்குதலை நடாத்திய மொஹம்மட் நசார் மொஹம்மட் அசாத் எனும் குண்டுதாரியின் தொலைபேசி இலக்கத்தை பகுப்பாய்வு செய்த போது, முன்னாள் அமைச்சர் ரிஷாத் சகோதரர், ரியாஜ் பதியுதீனுடனான 7 அழைப்புக்கள் தொடர்பில் தகவல்கள் வெளிப்பட்டு உள்ளதாகவும் அது குறித்து தடுப்புக் காவலில் அவரிடம் விசாரணை நடாத்தப்படுவதாகவும் நான்காம் மாடித் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு முன்னர் மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகார சந்தேக நபர்களை விடுவிக்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க பிரதான சந்தேக நபரான ஷஹ்ரான் ஹஷிம் எனும் பயங்கரவாதியால் 20 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே சிஐடி தகவல்களை வெளிப்படுத்தியிருந்தது.

அந்தப் பணம் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஸ்புல்லாஹ்வுக்கே வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com