
வவுனியா வடக்கில் விவசாயிகளுக்கான சந்தைப்படுத்தலை பெற்றுக் கொடுக்கும் வகையில் 15 ஆயிரம் கிலோ பெசன் புறுட் காகில்ஸ் ஊடாக கொள்வனவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன தெரிவித்தார்.

வவுனியா வடக்கில் விவசாயிகளிடம் இருந்து பெசன் புறுட் கொள்வனவு நிகழ்வை சின்ன பூவசன்குளத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

விவசாயிகள் தமது உற்பத்திகளை விற்க முடியாது சிரமப்படுகின்றனர். ஆனால் அந்தநிலை வவுனியாவில் மிகக்குறைவாகவே காணப்படுகிறது. ஓரளவுக்கேனும் குறித்த விலையில் மரக்கறிகளையும், உற்பத்திகளையும் விற்கக் கூடிய நிலை கிடைத்துள்ளது.

அதற்கு மாவட்ட செயலக, பிரதேச செயலக, கமநல அபிவிருத்தி திணைக்கள மற்றும் மகாண விவசாய திணைக்களம் அதேபோன்று ஏனைய நிறுவனங்கள் தான் அதற்கு காரணம். இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதால் உற்பத்திகளை சந்தைப்படுத்தக் கூடிய பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விவசாயிகளின் உற்பத்தியினைச் சந்தைப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இப்பகுதியில் பெசன் புறுட் உற்பத்தியும், நீத்துப்பூசணி உற்பத்தியும் அதிகமாக காணப்படுகின்றது. விவசாயிகள் இந்த உற்பத்திகளை மேற்கொண்டு குறைந்த விலையில் விற்று அவர்கள் நட்டத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்த வேளையில், கிளிநொச்சி காகில்ஸ் கிளையில் இந்த பெசன் புறுட் உற்பத்திகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர்.

கொரனா வைரஸ் காரணமாக குறைந்த ஊழியர்களே கடமையில் இருப்பதால் மொத்த உற்பத்திகளையும் பெற முடியாது என அவர்களால் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கட்டானை காகில்ஸ் கொள்வனவு நிலையத்தில் இருந்து ஒரு தொகுதியை கொள்வனவு செய்ய முடியும் என காகில்ஸ் கூறியிருந்தனர். அதற்கமைவாகவே இன்றைய இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

ஓரு கிலோ பெசன் புறுட் 55 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படுகிறது. இதில் போக்குவரத்து மற்றும் ஏனைய செலவுகள் போக 50 ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு இலாபமாக கிடைக்கிறது. இன்றைய தினம் 15 ஆயிரம் கிலோ பெசன் புறுட் கொள்வனவு செய்வதன் மூலம் விவசாயிகள் சந்தைவாய்ப்பு வசதியைப் பெற்றுள்ளனர் எனத் தெரிவித்தார்.

இதன்போது கொரனா வைரஸ் தாக்கம் காரணமாக நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டத்தால் சந்தைப்படுத்தல் வசதி இன்றி இருந்த வவுனியா வடக்கு விவசாயிகளிடம் இருந்து 15 ஆயிரம் கிலோ பெசன்புறுட் கொள்வனவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் இ.வியஜகுமார் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.