வடக்கின் கொரொனா நிலவரம் என்ன: மாகாண சுகாதார பணிப்பாளரின் தகவல்

சிறிலங்கா கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பணியாளர் பணியாற்றிய இடத்தில் பணிபுரிந்த புங்குடுதீவை சேர்ந்த 2 யுவதிகள் யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இப்பிரதேசத்தில் கொரோனா தொற்றுப் பரம்பலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யுவதிகள் இருவரும் அவர்களோடு தொடர்பிலிருந்த மேலும் 20 பேரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளன. (அதில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது)

மேலும் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பணியாளர் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை வழங்கிய தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தனது குடும்பத்துடன் யாழ் மாவட்டத்திற்கு சுற்றுலா வந்துள்ளார். அவர் தங்கியிருந்த மாதகலில் அமைந்திருக்கும் கடற்படைக்குச் சொந்தமான சுற்றுலா விடுதியிலேயே அவருடன் தொடர்பிலிருந்த 15 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டன.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் வாடி அமைத்துத் தங்கியிருந்து கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் சிலர் ஆழ்கடலில் இந்திய மீனவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்திய மீனவர்களுடன் நேரடித் தொடர்பிலிருந்த 9 பேர் கட்டாய தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்புடைய ஏனைய 70 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

இவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இப்பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மேலதிக தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். 

வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் 

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் 

வடமாகாணம்.