ரிஷாட்டின் தம்பி விடுதலை: அரசியல் ‘டீல்’ என குற்றம் சாட்டும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நபர் தற்போது திடீரென விடுதலை செய்யப்பட்டுள்ளமைக்கு கடும் எதிர்ப்பினை தெரிவிப்பதாகக் கூறிய பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இதன் பின்னணி அரசியல் ரீதியான இரகசிய ஒப்பந்தமாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் கூறினார்.

விடுதலை செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பில் ஆரம்பத்தில் கூறப்பட்ட விடயங்களுக்கும் தற்போது கூறப்படும் விடயங்களுக்குமிடையில் வேறுபாடுகள் உள்ளன. 

இவர் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறிய தகவல்கள் எம்மிடம் உள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவினரின் செயற்பாடுகளில் முரண்பாடான நிலைமை காணப்படுகிறது. 

தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு கவலையடைந்துள்ள மக்களுக்கான விசாரணைகள் பக்கசார்பற்ற முறையில் நடத்தப்படுமா இல்லையா என்ற பயம் எமக்கு ஏற்பட்டுள்ளது. அத்தோடு இதில் அரசியல் ரீதியான இரகசிய ஒப்பந்தம் காணப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் எம்மிடம் கேள்வியெழுப்புகின்றனர். இந்த விடயத்தை சாதாரணமாக விட முடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இனங்காணப்படுவதற்கான நடவடிக்கைகள் ஒழுக்கத்துடனும் பக்கசார்பற்ற ரீதியிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோருகின்றோம் என்றும் அவர் மேலும் கூறினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com