ஹர்த்தாலை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக த.ம.வி.பு ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிராக வட,கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் மட்டக்களப்பு – வாழைச்சேனையில் அரசை ஆதரித்து ஹர்த்தாலுக்கு எதிரவாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினுடைய ஆதரவாளர்கள் சிலர் இன்று (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, “வாழ விடு வாழ விடு நிம்மதியாக வாழ விடு, குழப்பாதே குழப்பாதே நாட்டை குழப்பாதே, அரசியல் சுயநலத்திற்கு தமிழ் மக்கள் பகடைக்காய்களா?, மேட்டுக்குடி அரசியல்வாதிகளே எம் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள், நாம் ஹர்த்தாலை எதிர்க்கின்றோம், நாம் ஒரே நாடு ஒரே தேசம் என்று ஒன்றுபட்டு வாழ்வோம், தேர்தலில் மக்கள் கற்பித்த பாடத்தினை மறந்து விட்டீர்களாக” என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் குறித்த ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் “பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுத்த பத்து தமிழ் கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தற்போது ஆட்சி அமைக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியும் தாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் இலாபங்களுக்காகவே இந்த ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு கோரியுள்ளனர். ஆனால் மக்களின் தேவைகள் அதிகம் உள்ளது. இதற்கு முகம் கொடுக்காமல் மக்கள் மத்தியில் நிம்மதியினை குழப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இந்த அரசாங்கத்தின் மூலம் தாம் நிம்மதியாக வாழ்வதாகவும், எங்களுக்கு இந்த அரசாங்கம் பூரண ஆதரவாக உள்ளதாகவும்” ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட குறித்த கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இதில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தர்மலிங்கம் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. (150)

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com