அம்பாறையில் ஹர்த்தாலுக்கு ஆதரவில்லை – பாதுகாப்பும் பலமாக இருந்தது!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிராக வட,கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில், அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் ஆதரவு வழங்காத மக்கள் தமது அன்றாட செயற்பாடுகள் வழமை போன்று முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உணவகங்கள், புடவைக்கடைகள் மற்றும் வீதியோர வியாபாரங்கள் வழமை போன்று இயங்கியது.

இதன்போது பொதுமக்கள் வழமை போன்று பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது. இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்திய முகாம் ஆகிய பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் வழமை போல் காணப்பட்டது.

அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸாருடன் இணைந்து கடற்படையினரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.

அத்துடன் கல்முனை பொது சந்தை உட்பட அதனை சூழவுள்ள பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் நடைபெற்றது. சப்பர் மாக்கட்கள், பாடசாலைகள், பாமசிகள், வங்கிகள், எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று இயங்கின.

இதேவேளை சில இடங்களில் பொது மக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com