20ஐ எதிர்த்து நீதிமன்றம் செல்வது சிக்கலில்லை – வாசுதேவ

20ஆவது திருத்தம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி, நீதிமன்றுக்கு செல்வதில் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“உண்மையில், 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக நீதிமன்றமும் ஆராயந்து பார்க்க வேண்டும். இதனை எமது பிரதான அரசியலமைப்பில் உள்வாங்க முடியுமா என்பதை நீதிமன்றம் அறிவிப்பதில் தவறு ஏதும் கிடையாது. அதேபோன்று, 19இல் உள்ள சில சரத்துக்களையும் நாம் இதில் உள்வாங்க வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச்சட்டம், ஜனாதிபதியின் பதவிக்காலம், ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க முடியாது உள்ளிட்டவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். 19 இல் உள்ள இவ்வாறான நல்ல சரத்துக்களை நாம் தொடர்ந்தும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் எமது யோசனையாக இருக்கிறது” – என்றார்.