உண்ணாவிரதமிருந்து தியாகதீபம் திலீபன் சாகவில்லை என்கிறார் பாதுகாப்புச் செயலர்!

உண்ணாவிரதப் போராட்டமிருந்து திலீபன் சாகவில்லை. அவர் ஒரு நோயாளி என்பதால் தலைவர் பிரபாகரனால் போராட்டத்துக்கு அனுப்பப் பட்டிருந்தார் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலர் மேஜர் ஜெனெரல் காமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டி போகம்பரை சிறைச்சாலைக்கு இன்று(12) பயணம் சென்றிருந்த பாதுகாப்புச் செயலர், பூஸா சிறைச்சாலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் கைதிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனையும் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

“இந்த நாட்டிலுள்ள பயங்கர குற்றவாளிகளே பூஸா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நியாயமானவை எனின் நிறைவேறியிருக்கும். அநீதியான கோரிக்கைகளை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது.

அதேவேளை, எமது நாட்டில் இடம்பெற்ற சாகும்வரை உண்ணாவிரதங்கள் தொடர்பில் பார்த்தால், அத்தகைய போராட்டத்தில் திலீபன் என்பவர் மட்டுமே ஈடுபட்டு உயிரிழந்துள்ளார். அவரும் உண்ணாநோம்பால் உயிரிழக்கவில்லை. அவர் ஒரு நோயாளி. இதன் காரணமாகவே தலைவர் பிரபாகரனால் அவர் போராட்டத்துக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

தற்போது பூஸாவில் 20 பேர்வரை உணவு உண்ண ஆரம்பித்து விட்டனர். மற்றவர்களும் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் வழமைக்குத் திரும்புவார்கள். ஆகவே இது ஒரு பெரிய பிரச்சினையில்லை” என்றார்.