கொலைகார நீட் தேர்வால் மதுரை மாணவி தற்கொலை

நீட் தேர்வு பயத்தால் மதுரையில் 19 வயது மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்த ஜோதி துர்காவின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் மாணவி தற்கொலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) நாளை நாடு முழுவதும் நடக்கிறது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான தேசிய அளிவிலான நுழைவுத் தேர்வு (நீட்) மே மாதம் நடப்பதாக இருந்தது. இது, கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வை எழுத நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்காக 3842 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 14 நகரங்களில் 240 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1 லட்சத்து 17ஆயிரத்து 990 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையங்களில் கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி நாளை (13ம் தேதி) மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடக்கிறது.

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர் காலை 11.40 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5 மணிக்கு முடியும். தேர்வு எழுத வரும் மாணவர்கள் தங்களுக்கு கொரோனா தொற்றோ அல்லது அதற்கான அறிகுறிகளோ இல்லை என்று உறுதிமொழி எழுதித் தர வேண்டும். விண்ணப்பிக்கும் போது பயன்படுத்திய அதே போட்டோவை தேர்வு மையத்துக்கு கொண்டு வர வேண்டும்.

தேர்வு மையத்துக்கு வரும் போது 50 மிலி சானிடைசரை கொண்டு வர வேண்டும். முகக்கவசம் மற்றும் கையுறைகளை மாணவர்கள் அணிந்து வர வேண்டும். அரசால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். அவை அசல் அடையாள அட்டையாக இருக்க வேண்டும். குறிப்பாக பான்கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, 12ம் வகுப்பு தேர்வுக்கு வழங்கப்பட்ட ஹால்டிக்கெட், பாஸ்போர்ட், ஆதார், ரேஷன் கார்டு, போன்றவற்றில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் முருகசுந்தரம். இவர் காவல்துறை எஸ்.ஐ. ஆக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஜோதி துர்கா(19) நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார். இவர்களது குடும்பம் 6வது சிறப்பு பட்டாலியன் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். நீட் தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தில், மாணவி ஜோதி துர்கா, இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ரிசர்வ் லைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக, அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ்(19) என்ற மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் மருத்துவ கனவை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடரந்து வலியுறுத்தி வருகின்றனர்.