தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் களவிஜயம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய பட்டியல் உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் அம்பாறை மாவட்டத்திற்கு களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 9 ஆவது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் இரண்டு ஆசனங்கள் பெறப்பட்ட நிலையில் தேசிய பட்டியல் மூலம் வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் எம்.பியாக அவர் சார்ந்த கட்சியினால் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று(11)  அம்பாறை மாவட்டத்தின் மக்கள் பிரச்சினைகளை ஆராயும் முகமாக வருகை தந்த அவர் கல்முனை உப பிரதேச செயலகம் நாவிதன்வெளி பிரதேச செயலகம் திருக்கோவில் மற்றும் பொத்துவில் பகுதிகளுக்கும் விஜயம் செய்திருந்தார்.

இவ்வாறு விஜயம் செய்த பின்னர் கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்த தமது கட்சி கடந்த காலங்களில் செயற்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் அதனை செயலுருவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

இதே வேளை நாடாளுமன்ற உறுப்பினர் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் மற்றும் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரை சந்தித்திருந்ததுடன் இவர் நாடாளுமன்ற உறுப்பினருக்குரிய பாதுகாப்பு உத்தியோகத்தர் எவரும் இன்றி வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.